5 & 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ..! மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது தமிழக அரசு -கமல் கட்சி அறிக்கை

  • நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
  • மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.ஆனால் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தேர்வு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்கின்ற அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே அது மாணவர்களுடைய கல்விக்கு பாதகம் விளைவிப்பது என்று நாம் நமது கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தோம்.முக்கியமாக இந்த பொதுத்தேர்வு முறையின் மூலமாக மாணவர்களின் தேர்ச்சியை கணிக்கக்கூடாது என்கின்ற நம் நிலைப்பாட்டை கூறியிருந்தோம்.இன்று அதே பொதுத்தேர்விற்காக பல பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகங்களில் சாதிச்சான்றிதழ் வாங்க நிற்கவேண்டிய அவநிலைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வலுப்படுத்தும் செயல்பாடுகளை விட்டுவிட்டு, தேர்வெழுத சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா?நம் பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமலும், சிறுவயதில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் ஆர்வத்தினை அதிகரித்த தேவையான வழிகள் குறித்து ஆராய்வதை அலட்சிப்படுத்தியும் அடிப்படை கல்வி கற்பதற்கு கூட பல தடைகளை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன நம் அரசுகள்.

இம்மாதிரியான திட்டங்கள் மூலம் மாணவர்களை, அதுவும் குறிப்பாக கிராமபுற மாணவர்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை, மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.