தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் மறுப்பு

  • ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
  • வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு  தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இதற்கு இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில் ,ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2ம் தேதி நடத்தி, தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறைக்கால பதிவாளர் மறுப்புதெரிவித்துவிட்டார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.