காவி உடையில் வள்ளுவர்..வாழ்த்து..வெடித்த சர்ச்சையால் புகைப்படம் நீக்கம்

 

  • காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்துடன் துணைக்குடியரசு தலைவர் திருவள்ளுவர் தின வாழ்த்து 
  • சற்று நேரத்தில் காவி உடை தோற்ற திருவள்ளுவரின் புகைப்படம் நீக்கப்பட்டு சாதரண தோற்றப் புகைப்படத்துடன் வாழ்த்து

 

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருவள்ளுவர் காவி உடையுடன் தோற்றமளிக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது திருவள்ளுவர்  தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் தனது ட்விட்டர் பதிவில் தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்து வெங்கையா நாயுடு ட்வீட் செய்தார்.அந்த ட்வீட் வாழ்த்து செய்தியில் சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை  அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் தோற்றமளிக்கும் வள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவிருந்தார்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை நீக்குமாறும்தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிடுமாறு பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்ட நிலையில் காவி உடை அணிந்த வள்ளுவரின் படம் நீக்கப்பட்டு துணைகுடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மீண்டும் எந்த ஒரு மத அடையாளமும் இன்றி, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha