மகளிர் உலகக்கோப்பை: 155 ரன்கள் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வீழ்த்திய மிதாலி ராஜ் படை..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் அணியும் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் :

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  யாஸ்திகா பாட்டியா 7 வது ஓவரில்  31 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 5, தீப்தி சர்மா வந்த வேகத்தில் 15 ரன் எடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர், மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்மிரிதி மந்தனா உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகள் திணறினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி 123 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 318 ரன் இலக்கு: 

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 317 ரன்கள் எடுத்து. இதனால், வெஸ்ட்இண்டீஸ் அணி 318 ரன் என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக டியான்ட்ரா ,ஹேலி மேத்யூஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.

அரைசதம் அடித்த டியான்ட்ரா:

சிறப்பாக விளையாடிய டியான்ட்ரா அரைசதம் விளாசி 62 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதில் 10 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும். இவர்கள் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை 100 ரன்கள் சென்றது. மற்றோரு தொடக்க வீரர் ஹேலி மேத்யூஸ் நிதானமாக விளையாடியதால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய அனைத்து ஒன்றை இலக்கு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:

மத்தியில் இறங்கிய ஷெமைன் காம்பல்லே 11, சேடியன்19 ரன்கள் எடுத்தனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்து 155 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 1 தோல்வியையும் தழுவி உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில்  உள்ளது.

author avatar
murugan