சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? – ஈபிஎஸ் விளக்கம்

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? என ஈபிஎஸ் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து வருகிறார். அப்போது, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர்வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து இன்று நிதியமைச்சர் அவர்களது பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, நேற்று எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நிதிநிலை அறிக்கை மீது தெளிவாகவும், விரிவாகவும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

சுட்டிக்காட்டிய குறைகளை தாங்கமுடியாத, பொறுத்துக்கொள்ள அவர் முடியாத இந்த அரசின் நிதியமைச்சர், எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவையிலிருந்து வெளியேறினார். மேலும் அவர் வெளியேறும்போது கையிலிருந்த காகிதங்களை வீசிவிட்டுச் சென்றார். அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்.

பிரதான எதிர்கட்சியை அவமதிக்கும் வகையில் நிதியமைச்சர் நடந்துகொண்டதை சட்டப்பேரவையில் விளக்கிக்கூற முற்பட்டோம். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம். எங்களின் வெளிநடப்பை கொச்சைப் படுத்தும் வகையில் பேரவைத் தலைவர் நொண்டிச் சாக்குக் கூறி வெளிநடப்புச் செய்ததாக விமர்ச்சித்தது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்