“ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகன பாதுகாப்புகளை,குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில்  திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது,ஒரு வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.

மேலும்,இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்:”முறைகேடு பிரச்சனையால் தேர்தலே ரத்து செய்யப்படும்போது,இந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்துக்குத் தரப்படும் பாதுகாப்புகளை,பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்? என்றும்,முறைகேடு செய்த தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு பகுதியினர் சரியாக இரண்டு தேர்வு மையங்களை தேர்வு செய்தது எப்படி?,16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 118 பேர் மட்டும்தான் குரூப் 4 போட்டித்தேர்வில் தவறு செய்தவர்களா? என்றும் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து,குரூப்-4 முறைகேடு மிகப்பெரிய மோசடி,எனவே,இது தொடர்பான விசாரணையை வேரிலிருந்து தொடங்க வேண்டும்.அதேபோல, டி.என்.பி.எஸ்.சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை.இதற்காக,சரியான பொறுப்புகளில் சரியான,நேர்மையான நபர்கள் நியமிக்கப்படும்போது தவறுகள் தவிர்க்கப்படும்”,என்று கூறி சிபிஐக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை  தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.