கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…? பின்னணி என்ன…?

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…?  

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.

எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்படி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பசவராஜ் பொம்மை அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

யார் இந்த பசவராஜ் பொம்மை..?

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

மெக்கானிக்கல் இன்ஜினீயரான பசவராஜ், தனது அரசியல் வாழ்க்கையை  ஜனதா தளத்துடன் தொடங்கினர். அதன்பின் கர்நாடகா சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இருமுறை கர்நாடக மேலவைக்கு தார்வாட் உள்ளூர் அதிகாரிகளின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜகவில் பசவராஜ்..!

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனதா தளம் கட்சியை விட்டுவிட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன்பின் இவர், கர்நாடகா மாநிலத் சட்டமன்ற தேர்தலில், காவேரி மாவட்டத்தில், ஷிகாகான் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த பசவராஜ் பொம்மை..?

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.ஆர்.பொம்மையின் மகன்தான் பசவராஜ் பொம்மை. இவருக்கு வயது 61. இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988 -1989 இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராக பதவி ஏற்பது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே  கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.தேவ கவுடாவின் மகன் எச்.டி.குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பாவின் இடத்தை நிரப்பிய பசவராஜ் பொம்மை 

பசவராஜ் பொம்மை 2008-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த போதில் இருந்தே, இவர் எடியூரப்பாவிற்கு மிகவும் நெருக்கமான ஒரு நபராகவும், எடியூரப்பா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீர்வளத்துறை அமைச்சராகவும், அதன்பின், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், தற்போது எடியூரப்பாவின் இடத்தை நிரப்பும் வண்ணம், கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவை போல லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான்.

பசவராஜ் பொம்மை பதவியேற்பு..!

பசவராஜ் பொம்மை கழுத்தில் காவி துண்டுடன், ராஜ்பவனில் முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு, ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல் எடியூரப்பா உட்பட, பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.