கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் நம் ஒற்றுமையை உணர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை.

கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், காவிரி பிரச்சனையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும். காவிரி என்பது கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை கொண்டது.

கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உணர்த்த வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்டும் அனைத்து முயற்சிகளையும் நாம் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும். காவிரியில் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையும். ஏற்கனவே, தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இந்த சூழலில் அணை கட்டப்பட்டால் எஞ்சிய நீரை மட்டுமே வழங்கும். அணையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என கர்நாடகம் கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை.

விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி குறியாகிவிடும். கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைத்துவரும் நீர் இந்த புதிய அணையில் தேக்கிவைக்கப்படும் என்றும் வாழ்வாதாரம் பிரச்சனையில் தமிழ்நாடு ஒரே சிந்தனையில் நின்றது என்பதை காட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்