உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கம் – பிரதமர் மோடி

2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் குஜராத் உட்பட நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வியில் வலுவடையும்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கான எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம்.உலக ஆரோக்கியத்தின் நரம்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும்.

நம் நாட்டில், வதந்திகள் விரைவாக பரவுகின்றன. வெவ்வேறு நபர்கள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தடுப்பூசி தொடங்கும் போது வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது .இது தொடர்பான வதந்திகள் ஏற்கனவே பரவத் தொடங்கிவிட்டன.கொரோனாவிற்கு எதிராகப் போராடுவது தெரியாத எதிரிக்கு எதிரானது என்று நாட்டின் மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய வதந்திகளைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்.ஒரு பொறுப்பான குடிமகனாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை உறுதி செய்யாமல் பரப்ப வேண்டாம்.நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்புமருந்து சென்றடைவதை உறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.