#INDvSA: தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு! – பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.  முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சிறப்பாக செயல்பட்டார். அவரு பேட்டிகளும் அசத்தினார்.

இதன்பின் ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டிக்குப் பிறகு சாஹருக்கு முதுகில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறவில்லை. அவர் இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) வரவழைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவக் குழுவால் அவர் கண்காணிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகினார். இவருக்கு பதிலாக முஹமது சமி, சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இதில் குறிப்பாக, உலக கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் தீபக் சாஹர் உள்ளார். இந்த நிலையில், அவருக்கும் முதுகு பிரச்சனை (stiffness in back) ஏற்பட்டுள்ளதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியை ராஞ்சியில் நாளை விளையாடும் மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியை அக்,11 அன்று டெல்லியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment