தேர்தல் விதிமீறலா.? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் உயர்வு…

NREGS : நாடு முழுதுவம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு உடல்உழைப்பு வேலை 100 நாட்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாருவது, மற்ற ஊரக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கான ஊதியம் தினசரி வகையில் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநில நிதிநிலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விதமாக ஊதியம் மாறுபடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 294 ரூபாய் தினசரி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில், தற்போது 100  நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினசரி ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் தினசரி ஊதியம் 294 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிகள்  அமலில் இருக்கும் சமயத்தில் மத்திய அரசு மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை , அறிவிப்புகளை அறிவிக்க கூடாது என்பது விதி. ஆனால், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டத்தினை தேர்தல் சமயத்தில் மேம்படுத்த வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் அனுமதி பெற வேண்டும். தற்போது மத்தியில் இருக்கும் பாஜக அரசு தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.