மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர் விஜயகாந்த்.! அமித்ஷா இரங்கல்.! 

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல்  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.?

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என பலரும் இரங்கலை நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி,முதல்வர் மு.க.ஸ்டாலின் , திமுக எம்பி கனிமொழி, திருமாவளவன் என பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரைவாழ்விலும் மற்றும் பொதுவாழ்வில் மூலமும்  மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்தின் உடல் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மக்கள் வெள்ளத்தில் சாலை மார்க்கமாக கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பலரும் கண்ணீர் மல்க விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.