அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நோவாக் ஜோகோவிச்!

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

அடுத்த போட்டியை எனது வாழ்க்கையின் கடைசி போட்டி போல் விளையாட போகிறேன் என்று ஜோகோவிச் தெரிவித்தார். இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதனால், முழு ஈடுபாடுடன் விளையாட உள்ளேன் என கூறினார்.

ஏற்கனவே 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் நான்காவது முறையும் வெல்வதற்கு தீவிரம் காட்டி வருகிறார். ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்