ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷு அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று ஜப்பானின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை (21 நிலநடுக்கங்கள்) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில், ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வர தொடங்கியது என பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகியுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையோர பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கி உள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஜப்பானை தொடர்ந்து, வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கி வரும் நிலையில் தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்