#Breaking:வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்கள் படும் இன்னல்கள்- மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கு,தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,முதல்வர் கூறியுள்ளதாவது:

“சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில், அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும்பட்சத்தில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்ப்பதற்கும் விரைவில் தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.