“20 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்கவில்லை என்றால் தடை!”- ட்ரம்ப்

20 ஆம் தேதிக்குள் டிக்டாக்கை விற்கவில்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இந்நிலையில் டிக் டாக் உள்ளிட்ட சீனா செயலிகள், மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுகிறதா என ஏராளமான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றதாகவும், இதனால் அந்த செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும், மாதங்கள் தள்ளிப்போகாது என வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் பேட்டி அளித்தார்.

அந்தவகையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவரும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்த நிலையில், இம்மாதம் 20ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக் செயலியை விற்க வேண்டுமென சீன நிறுவனத்திற்கு அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், டிக்டாக் செயலியை விற்க வரும் 20 ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், இல்லையென்றால் அமெரிக்காவில் டிக் டாக் முற்றிலுமாக தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.