பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…இதனை பின்பற்றுங்கள் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,500  பேருந்துகளில் சிசிடிவி கேமரா,அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதில் 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது பிரச்சனை என்றால்,அவசர அழைப்பு பொத்தானை அழுத்தினால்,நேரடியாக கட்டுப்பாடு அறையில் ஒலி எழுப்பும்,இதன் மூலம் பெண்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பிரச்சனை என்றால்,அருகில் இருக்கும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவர்கள் உதவி புரியும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பெண்கள்,குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும்,அவசர அழைப்பு பொத்தானை (Panic Button) அழுத்தி அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.அவ்வாறு செய்வதன்மூலம்,கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும்.இந்த ஒலி தூண்டுதலை கொண்டு,செயலியை இயக்குபவர் (Operator) நிலைமையைக் கண்காணித்து,நிகழ்நேர அடிப்படையில் அடுத்த நடவடிக்கைக்கு ஆவன செய்வார்.

பேருந்தின் நடத்துனர் பேருந்தினுள் இந்த ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து, அதற்கு தக்கவாறு காவல் துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் 9445030570 (நிர்பயாஉதவிமையம்) என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாடு மையத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment