பாமக – பாஜக இருந்தால் அங்கு விசிக இருக்காது.! திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு.!

பாமக – பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்காது என திருமாவளவன் பேசினார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கொள்கை பற்றி அடிக்கடி பேசிவருவதையும், அண்மையில் மார்க்ஸ் கருத்து பற்றி விமர்சனம் செய்ததையும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக நினைப்பதாகவும் கூறி அதற்கான கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதான கொள்கைக்கு எதிரான இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள் : இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை கைது.? : இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சனாதான சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் எழுகிறது என குறிப்பிட்டார். பாஜக தலைவர் அண்ணாமலை, உத்தரவிட பிரதமர் இருக்கிறார். சுட்டு தள்ளுங்கள் என பேசுகிறார். இந்நேரம் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செய்யவில்லை என திருமாவளவன் கூறினார். மேலும், தமிழக அரசே கவனக்குறைவாக இருக்காதீர்கள். சனாதன சக்திகள் தமிழகத்தில் வன்முறையை தூண்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாமக – பாஜக : அடுத்து அவர் பேசுகையில், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது தளபதி மு.க.ஸ்டாலின், என்னை உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொன்னார். நான் தோற்றாலும் பரவாயில்லை என்று தனிச் சின்னத்தில் நின்று வென்று காட்டினேன். எனக்கு ஒரு நாளும் பதவி மீது ஆசை கிடையாது. மேலும், பாமக – பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்காது எனவும் திருமாவளவன் பகிரங்கமாக கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment