இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான்

இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான்  வலியுறுத்தல்.

இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் கொள்கையையும் மாற்ற வேண்டும்.

மேலும், பன்னாட்டு அரங்கில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அரசு நுட்ப முன்னெடுப்புகளையும் இந்திய அரசு தொடங்க வேண்டும்.

தற்போது இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள சீன இராணுவத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment