ஆண்களுக்கான தேசிய ஆணையம் அமைப்பதற்கான மனுவை ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கின்றது உச்சநீதிமன்றம்..!

திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கிறது. 

உச்சநீதிமன்றத்தில் வக்கீல் மகேஷ் குமார் திவாரி தாக்கல் செய்த மனுவில், 2021 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) இந்தியாவில் விபத்து மரணங்கள் குறித்து வெளியிடப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, அந்த ஆண்டில் நாடு முழுவதும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர். இவர்களில் 81,063 திருமணமான ஆண்கள், 28,680 திருமணமான பெண்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், குடும்ப வன்முறை அல்லது குடும்பப் பிரச்சனை மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பதற்குத் தேவையான அறிக்கையைத் தயாரிக்க இந்திய சட்ட ஆணையத்திற்கு வழிகாட்டுதல் பரிந்துரையை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்ப வன்முறைக்கு ஆளான திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரிய பொதுநல மனுவை ஜூலை 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பொதுநல மனுவை பட்டியலிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.