புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் – சீமான்

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் தற்காலத்தில் நிலவும் அசாதாரணச்சூழலைத் தனக்குத் தற்பயனாக்க முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பன்முகத்தன்மை எனும் இந்நாட்டின் தனித்துவத்தைச் சிதைத்தழிக்கும் சதிச்செயலை பெரும் முனைப்போடு செயல்படுத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியிலே அதிகாரத்தைக் குவிப்பதையும், தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை மறைத்து, ஒற்றைமயப்படுத்துவதையும் வீரியமாகச் செய்து எதேச்சதிகாரப்போக்கைக் கட்டவிழ்த்துவிடும் பாசிச செயல்பாட்டின் நீட்சியாக நாடு முழுமைக்கும் தேசியக்கல்விக் கொள்கை எனும் பெயரில் காவிக்கொள்கையை நடைமுறைப்படுத்த முனைவது இந்தியாவின் இறையாண்மையையே தகர்க்கும் பேராபத்தாகும்.

புதிய கல்விக்கொள்கையின் வாயிலாக நிகழும் மொழித் திணிப்பினை தமிழக அரசு எதிர்ப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அதுவே போதுமானதல்ல. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தாய்மொழி வழி கற்றல் எனும் ஒரு மொழி கொள்கையே சரியான கல்விக்கொள்கை. அதற்கு நேர்மாறாக மும்மொழிக்கொள்கையைத் திணித்து மாநிலத்தன்னாட்சிக்குப் பங்கம் விளைத்திடும் இப்புதிய கல்விக்கொள்கையை மொத்தமாய் தமிழக அரசு அமுல்படுத்தக்கூடாது.ஆகவே, தமிழக அரசு இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.