ஒலிம்பிக் ஹாக்கி:ஜப்பானை வீழ்த்தி கெத்து காட்டிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி…!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இன்று ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தோல்வி:

இதனைத் தொடர்ந்து,26 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

தொடர் வெற்றி:

இருப்பினும்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 3 ஆவது லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி,ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு,3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் சாம்பியன்:

இதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி, பூல் ஏ போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. மேலும்,குருப் ஏ பிரிவு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மீண்டும் வெற்றி:

இந்நிலையில்,இன்னும் சில நல்ல செய்திகள் என்னவென்றால்,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில்,ஜப்பான் அணியை,இந்தியா எதிர்கொண்டது.

முதல் ஆட்டத்தில் 13 வது நிமிடத்தில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இரண்டாவது ஆட்டத்தில் 17 வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.இதனால் ,இரண்டாவது பாதியில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

இவ்வாறு தொடர்ந்து முன்னேறிய இந்திய அணியை சுதாரித்துக் கொண்ட ஜப்பான் அணி மூன்றாவது ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்தது.இதனால்,2 – 2 என்ற கணக்கில் அணிகள்  சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து,இந்தியாவின் ஷிம்ரன்ஜீத் சிங் கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்று,காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இதுவரை ஆண்கள் ஹாக்கியின் குருப் ஏ பிரிவில் 5 போட்டிகளில்,ஒரு தோல்வியை தழுவி, 4 இல் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது.