பாமக எடுத்த முடிவு.. அது அவர்களுக்கு தான் இழப்பு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலில் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பில்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டு மக்களுக்கு அதிமுக பல நன்மைகள் செய்துள்ளது. திமுக பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை முழுமையாக மொட்டை அடித்துவிட்டார்கள். இதன் தாக்கம் திமுகவுக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும்.

அதிமுகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு செய்துள்ளதால், எங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கைகொடுக்கும் என நம்பிக்கை உள்ளது. மக்கள் எங்களுடன் இருக்கும் வரை எந்த இழப்பும் கிடையாது.

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு. தனித்து போட்டியிடுவது பாமகவின் தனிப்பட்ட முடிவு. யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்து போட்டி என முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. உட்கட்சி பற்றி பேசுவதற்கு யாருக்கும் அந்த தகுதி கிடையாது.

அம்மாவின் மறைவிற்கு பிறகு பல விமர்சனங்களை கடந்து தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் குறைந்த வாக்குகள் தான் வித்தியாசம். மாபெரும் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளோம். அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் எந்த பாதிப்பு கிடையாது என தெரிவித்தார்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தலையை தேடி கொண்டியிருக்கிறார்கள் காவல்துறை. மதுரையில் மாற்றுத்திறனாளி படுகொலை செய்துள்ளனர் என்றும் ராமநாதபுரத்தில் பெட்ரோல் பங்கில் கொள்ளை நடந்துள்ளது என குற்றசாட்டி திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்