அவசர வழக்காக மாறும் ஜல்லிக்கட்டு.! உச்சநீதிமன்றம் சொல்வதென்ன.?

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அதன்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல ஆண்டுதோறும் பொங்கல் தின சமயத்தில் நடைபெற்று வருகிறது. அரசு இயற்றிய இந்த சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்ப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தன.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துகொண்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் விலங்குகள் துப்புறுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்கள் பாரம்பரியம், பண்பாட்டோடு தொடர்புடைய விளையாட்டு எனவும், இதில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

மதுரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்… ஜனவரி 23ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்த வழக்கு விசாரணை இறுதியில் அண்மையில்,  ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து இருந்தது. இதனை தொடர்ந்து , விலங்குகள் நல வாரிய அமைப்புகள், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் என்பது மனிதனின் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது.  2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது என்றும், தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக வழக்கின் தன்மை மற்றும் மற்ற வழக்குகளின் பட்டியல் கொண்டு  ஆய்வு செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அவசர வழக்காக ஒரு வழக்கை விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார். அதன் பிறகு குறிப்பிட்ட நீதிமன்ற அமர்வுக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.