உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி – ஜஸ்பிரீத் பும்ரா ட்வீட்

காயம் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ட்வீட்.

இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக பும்ரா இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கடைசி இரு போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.

இதனைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அன்றைய போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்படும் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இம்முறை டி20 போட்டிகளில் நான் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. உடல்நிலை சீரானதும், இந்திய அணிக்கு என்னுடைய ஆதரவை அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment