#குட்நியூஸ்: மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை! கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு குறைப்பு!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில், வருமான வரி, குடிநீர் இணைப்பு, வீட்டு வசதி மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதில், கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு 15% ஆக குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்றும் கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. வருமான வரிக்கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய அனுமதி, வரி செலுத்துவபர்கள் அப்டேட் செய்யப்பட்ட கணக்கை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவரது உரையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடரும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்றும் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு வருடம் நீக்கப்படும் எனவும் அறிவித்தார்.

பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். விர்ச்சுவல், டிஜிட்டல் சொத்துக்கள் விற்பனை வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும். வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்த நிதியமைச்சர், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS (Tax deduction at source) சலுகை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 4வது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 2022 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்படுகிறது என்றும் மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வை 7.5% ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டி உரையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan