இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.!

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஸ்ட்ரைக் நடந்தாலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னரே, அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நிதித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். அத்ன்பிறகு, தொழிற்சங்க போராட்டம் நடந்தாலும், தொமுச உள்ளிட்ட சங்கங்கள் மூலம் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்து இருந்தார்.

இதனை அடுத்து நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தையானது தோல்வியில் முடிந்துள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தராஜன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் அதனை பொங்கலுக்கு பிறகு ஆலோசிக்கலாம் என திருப்தியற்ற பதிலை அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு அடுத்து வந்த அமைச்சரும் அதே பதிலை தான் கூறினார்.

வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி என எதன்மீதும் தற்போது பதில் கூற முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த சமரச பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்கள் போல  பார்க்கிறார்கள். ஓய்வூதியதரர்களுக்கு பஞ்சபடி என்பது எங்களிடம் அரசு வைத்துள்ள பாக்கி தொகை, கடந்த 8 ஆண்டுகளாக சுமார் 96,000 பேருக்கு மாதம் 6 ஆயிரம் வீதம் பஞ்சபடி தராமல் இருக்கிறது. அதே போல ஊதிய உயர்வு பற்றியும் ஆலோசித்தோம். அனால் அவர்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறுகிறார்கள். நாங்கள் தற்போது கேட்பது எங்களிடம் பட்ட கடனை திரும்பி தாருங்கள் என்று தான்.  பொங்கல் சிறப்பாக நடக்க வேண்டும் என நாங்கள் எங்கள் கோரிக்கையை சுருக்கி விட்டோம். மாதம் 70 கோடி ருந்தால் இந்த பிரச்சனை தற்போது தீர்ந்துவிடும்.

6 அம்ச கோரிக்கையை ஒரு கோரிக்கையாக மாற்றிவிட்டோம் ஆனாலும் அதனை அரசு ஏற்க மறுக்கிறது.  இன்று இரவு வரை காலம் இருக்கிறது. அதற்குள் மீண்டும் அழைத்து பேச தயார் என்றால் நாங்களும் பேச தயார். இல்லையென்றால் நாளை முதல் ஏற்கனவே அறிவித்தபடி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.