காலம் விரைவில் மாறும்… உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

நோய்த்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என்று திமுகவினருக்கு முதல்வர் கடிதம்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் மற்றும் மேட்டூர் அணை நீர் திறப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார்.

இதையடுத்து திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட பிறகு சென்னை திரும்பிவிடுவார். இந்த சூழலில் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் “நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்” என்று ஆரம்பித்துள்ளார்.

மக்கள் நலன் காக்கும் மற்றொரு பயணமாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக்கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் உள்ளிட்ட அன்புக்குரிய உடன்பிறப்புகள் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம் என்பதையும், வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று மாவட்டங்களில் தஞ்சையும் சேலமும் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள் எனவே, உடன்பிறப்புகளாகிய நீங்களும் உங்களில் ஒருவனான நானும் ஊரடங்குக் கால நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தும், இந்த ஆட்சி அமைவதற்கான அயராத உழைப்பை அல்லும் பகலும் வழங்கிய அன்பு உடன்பிறப்புகளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு பயணத்தின்போதும், உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடும் அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதும் இதயத்தில் பாரமாக அழுத்துகிறது.

‘கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் – ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான். பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.