“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.

தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, 5 ஆண்டுகள் *365 நாட்களும் (365×5 years) பணியில் இருப்பேன் என்ற உறுதியின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை என்பது இந்த தொகுதியில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் மற்றும் இந்த தொகுதியை எப்படி வளர்ச்சி தொகுதியாக கொண்டுவருவது தொடர்பான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தென் சென்னை தொகுதிக்கான வாக்குறுதிகள்:

  • சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்றுநீரை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய நீர்வள அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து தென்சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நீர்நிலைகள் தூர்வரப்பட்டு சீரமைக்கப்படும்.
  • மிகப்பெரிய அளவில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்படும்.
  • உடனடி உதவிக்கான திட்டம்:  மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project) அசோக் நகர், வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.
  • மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள், மீட்பு டிரக்குகள் ஆகியவற்றை கொண்ட முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.
  • மெட்ரோ ரயில் 2 திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் 2 திட்டம் கொண்டுவர நடவடிக்கை.
  • பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை.
  • சென்னை – கடலூர் இடையே கடல்வழி போக்குவரத்து ஏற்படுத்தப்படும்.
  • அம்மா உணவகங்கள் போன்று ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
  • ரயில் நிலையங்கள் அதிநவீன வசதியுடன் மறுசீரமைக்கப்படும்.
  • நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
  • ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 3 பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
  • மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
  • மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம் கொண்டுவரப்படும்.
  • நவீன வசதிகளுடன் சுற்றுசூழல் பூங்காக்கள் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்