#T20WorldCup2021: எம்.எஸ்.தோனிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நன்றி!

பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு, சவுரவ் கங்குலி நன்றி.

பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு நன்றி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்ததாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதில் பதிவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இத்துடன்  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உலகக்கோப்பையில் வழிகாட்டியாக செயல்படுவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார்.

இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, நான் துபாயில் இருந்தபோது எம்எஸ் தோனியிடம், டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக வருமாறு தோனியிடம் நான் கேட்டேன். தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த தொடர்பாக நான் பிசிசிஐ-யின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டேன். அவர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து சம்மதம் தெரிவித்தனர்.

இதனால்தான் விரைவாக இந்த முடிவுக்கு வர முடிந்தது எனத் தெரிவித்திருந்தார்.  இந்த அறிவிப்பிற்கு தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் பிசிசிஐ-யின் முக்கிய முடிவை வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்