உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடம் – முக ஸ்டாலின் அறிக்கை.!

மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிராமப் பகுதிகள் மற்றும் மலைவாழ் பகுதிகள் போன்றவற்றில் இருக்கக் கூடிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெறுவதற்காக அப்பகுதிகளில் பணி செய்யக்கூடிய இளம் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் இதனை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடம் என்று தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மற்றோர் அங்கமாகவே முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளைப் பறித்து, கடந்த இரு ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நடத்திட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, நோய் நொடியின்றி கிராமப்புற மக்களைப் பாதுகாத்திட வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்