அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Supreme Court: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக  ஒதுக்கியதாக புகாா் எழுந்தது. இதன்பின் கடந்த 2012 அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி அந்த வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நிலையில் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். அதேசமயம் முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க ஐ பெரியசாமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமியின்  தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்