தனது உரையாடலை ஸ்டீபன் ஹாக்கிங் நிகழ்த்தியது எப்படி?

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நரம்பு மண்டல பாதிப்பால் பேச்சுத் திறனை இழந்த ஸ்டீபன் ஹாக்கிங்,  தனது உரையை நிகழ்த்தி வந்தார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். நரம்பு மண்டல பாதிப்பால் தனது பேச்சுத் திறனை இழந்த அவர் மற்றவர்களுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி தனது உரையை நிகழ்த்தினார் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தொடக்ககாலத்தில் ஓரளவு உடல் இயக்கத்தையும் பேச்சையும் கொண்டிருந்த ஹாக்கிங், படிப்படியாகத் தனது திறன்களை இழந்தார். அவரால் பேசவோ எழுதவோ முடியாது என்றாலும் அவரைச் சாதாரண மனிதர்கள் போல் வாழ வைப்பதற்கு தொழில்நுட்பம் உதவி செய்து வந்தது.

கை, கால் முடக்கத்தை அவரது அதி நவீனத் திறன் கொண்ட சக்கர நாற்காலி ஓரளவுக்கு ஈடு செய்ததென்றால், அவரது குரலை மீட்டெடுப்பதற்கு உதவியது ஸ்பீச் சிந்தேசிசர் (Speeech Synthesizer) எனப்படும் பேச்சொலியாக்க முறை. கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிவிட்ட ஹாக்கிங்கால், தனது முகத்தின் பகுதித் தசைகளை மட்டுமே சற்று அசைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த அசைவுகளைக் கொண்டே, அவருக்கு ஒரு குரலைக் கொடுத்திருந்தது தொழில்நுட்பம்.

1997-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங்கின் சக்கர நாற்காலியில் இன்டெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு டேப்லெட் கணிணி பொருத்தப்பட்டது. இதுவே நாம் கேட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரலுக்கு அடிப்படை.

வேர்ல்ட் பிளஸ்(word Plus) என்ற நிறுவனம் உருவாக்கிய இஎசட் கீய்ஸ்(EZ Keys) என்ற மென்பொருள் இந்த டேப்லெட் கணினியில் நிறுவப்பட்டிருக்கிறது. பேச்சொலியாக்கலுக்கான கீபோர்டைக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை ஸ்டீபன் ஹாக்கிங் தனது கன்னத்தை அசைப்பதன் மூலம் கட்டுப்படுத்தினார். இந்த அசைவானது அவர் அணிந்திருக்கும் கண்ணாடியில் உள்ள அகச்சிவப்பு கருவி மூலம் உணரப்பட்டது.

என்ன சொல்ல வேண்டுமோ அதை சொற்களாக டேப்லெட் கணினியில் கொண்டு வருவதற்காக ஹாக்கிங் தனது கன்னத்தை அசைப்பார். அப்போது டேப்லெட் கணினியின் கீபோர்டில் உள்ள எழுத்துகள் தேர்வு செய்யப்படும். முதல் சில எழுத்துகளை டைப் செய்தவுடனேயே கணிப்பு முறையில் மற்ற எழுத்துகள் நிரப்பப்பட்டு ஒரு சொல் திரையில் தோன்றும். அந்த எழுத்துகளில் தொடங்கும் பிற சொற்களும் அதன் கீழே பட்டியலிடப்படும். தேவைப்பட்டால் அந்த சொற்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வாக்கியம் தயாரானதும் அது நேரடியாக டெக்ஸ்ட் டு ஸ்பீச் (TEXT TO SPEECH) முறை மூலமாக குரலாக மாற்றப்படுகிறது. இதில், சில குறியீடுகளுக்காக உதடு மற்றும் புருவத்தையும் ஹாக்கிங் பயன்படுத்தினார்.

இஎசட் கீய்ஸ்(EZ Keys)  மென்பொருள் மூலமாக விண்டோஸ் கணினியின் சுட்டியைக் கூட இயக்க முடியும். இதனால் தாமாகவே மின்னஞ்சலைப் பார்ப்பதும் ஹாக்கிங்கிற்குச் சாத்தியமாக இருந்தது. ஸ்கைப் போன்ற இணையத் தொடர்பு வசதிகள் மூலமாக உலகெங்கிலும் உள்ள நண்பர்களிடம் பேசவும் அவரால் முடிந்தது.

இது மட்டுமல்லாமல், கல்லூரிகளிலும், பொது மேடைகளிலும் பேசுவதற்கும் இந்த முறையை பயன்படுத்தினார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முழு உரையையும் முன்னரே தயார் செய்து வைத்துவிடுவார் ஸ்டீபன் ஹாக்கிங். பின்னர் தேவைப்படும் போது ஒவ்வொரு வாக்கியமாகக் குரல் மாற்றும் மென்பொருளுக்கு அனுப்புவதன் மூலம் அவரால் சாதாரணமாகப் பேசுவது போல உரையாற்ற முடிந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் ஸ்டீபன் ஹாக்கிங், உலகுடன் தொடர்பு கொள்ளும் முறை படிப்படியாக மேம்பட்டு வந்தது. இன்டெல் நிறுவனம் அளித்திருக்கும் தொழில்நுட்பமும் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்திருக்கிறது. முதலில் இருந்ததைக் காட்டிலும் சமீபத்திய தொழில்நுட்பம் மூலம் இரு மடங்கு வேகத்தில் அவர் பேசி வந்தார்.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், வெற்றிபெறுவதற்கு ஏதேனும் ஒரு வழி இருந்தே தீரும் என்பார் ஹாக்கிங். அவர் மீட்டெடுத்த குரலே அதை உறுதி செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment