இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு!

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சீரம் நிறுவனத்தின் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் நன்கொடையாகவும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது. இந்த தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு குறிப்பிட்ட அளவு இந்தியாவால் அனுப்பப்பட்டு இருந்தது. இது முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலங்கையில் முதல் கட்டமாக போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான தடுப்பூசிகள் கூடுதலாகத் தேவை என இலங்கை அரசு அண்மையில் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதனடிப்படையில் தற்போது இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து சீரம் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை இலங்கை அரசு நேற்று பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்தது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal