மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் – உயர்நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில், மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணி மீதான ஊழல் வழக்கில், மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

மேலும், மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும், அதே நேரத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசின் ஆட்சேபனை நிராகரித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, இடைக்கால உத்தரவு தொடர்பாக விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து  தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment