ரஷ்யாவில் தங்கள் பொருட்கள் விற்பனை நிறுத்தம் – சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் அனைத்தையும் நிறுத்துவதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச்.பி., ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்த வரிசையில்  ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது ரஷ்யா.  ராணுவம் பற்றி போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் ஒன்றை அறிவித்திருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்