தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!

119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை வாக்குப்பதிவு  கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தல் 2023 முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து,  தெலங்கானாவில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.  தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என அக்கட்சி  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பதவியேற்பு விழா டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் மருமகன் ரேவந்த் ரெட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டிஆர்எஸ் வேட்பாளர் மர்ரி ராஜசேகர ரெட்டியை தோற்கடித்தார்.

2023 சட்டமன்றத் தேர்தலில், ரேவந்த் ரெட்டி கோடங்கல் மற்றும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார், ஆனால் காமரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார்.

author avatar
murugan