#Breaking:அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்த மழை,வெள்ளம் – சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை:தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்றும்,அதை முறையாகக் கற்று அடுத்தடுத்த மழைக் காலங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதி நாள் தண்ணீருக்காகவும்,மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும்,சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,நீர் வழிப்பாதையில் எந்த தடையும் இருக்க கூடாது, வெள்ளம் வடிவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரியலூர் மாவட்ட பெரிய திருக்கோணத்தில் மாமனக்கா ஏரி ஆக்கிரமிக்கப்பட்டதாகவும்,அதனை மீட்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இத்தகைய உத்தவிட்டுள்ளது.

சற்று முன்னதாக,சென்னையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியது குறித்து,கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும்,2015 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?,ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.