ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்… 

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் பாஜக ஆட்சியில் இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை விவசாய கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பாஜக மீதான விமர்சனத்தை அடுக்கடுக்காக முன்வைத்துள்ளார். அதில், பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த 16 லட்சம் கோடி ரூபாய் கொண்டு, 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கும். 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.

10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்து,எண்ணற்ற விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்.

இந்திய ராணுவத்தின் மொத்த செலவுகளையும் 3 வருடங்கள் மேற்கொண்டு இருக்கலாம். தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம்.

நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை இந்திய நாடு ஒருபோதும் மன்னிக்காது. ஆனால், இப்போது நிலைமை மாறும். ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் என தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.