ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகல் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக பயணித்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார். அப்போது,  கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த பாதுகாப்புடன் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி, பேட்டரி கார் மூலம் கோயில் வளாகத்துக்கு சென்றார்.

ராமேஸ்வரம் – 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி!

பின்னர் பைஜாமா, ஜிப்பா அணிந்து கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பிரதமருக்கு தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, பஜனை பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மனமுருகி கேட்டு மகிழ்ந்து வருகிறார்.

இதனிடையே, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்தை முடிக்கும் பிரதமர் மோடி, நாளை தனுஷ்கோடி சென்று ராமர் பாதத்தை தரிசிக்க உள்ளார். அதன் பின்னர் டெல்லிக்கு திரும்புகிறார் பிரதமர் மோடி.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்