விடுங்க தம்பிகளா.. கவலைப்படாதீங்க.! கிரிக்கெட் வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி.!

கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

ராகுல் டிராவிட் ஒப்பந்தம் முடிவு.. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்..?

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் ரசிகர்கள் மற்றும் வீரர்கள்மிகவும் வருத்தத்தில் இருந்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி வீரர்கள் தங்கி இருக்கும் அறைக்கு நேரடியாக சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், நரேந்திர மோடி ஹிந்தியில் பேசுவது தமிழில் கீழே மொழிபெயர்த்து பதியப்பட்டுள்ளது. அதில், ” நீங்க எல்லோரும் பத்து ஆட்டங்களை வென்று உள்ளீர்கள். விடுங்கள் தம்பிகளா. நாடே உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. கவலைப்படாதீங்க. நீங்க எல்லாரும் சிறப்பாக முயற்சி செய்தீர்கள். விடுங்கள் பார்த்துக்கலாம். இதுபோல நடக்கும். சிரித்துக்கொண்டே இருங்கள். எல்லோரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள். இந்த நேரத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பலமாக இருக்க வேண்டும். நாடு உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது என பிரதமர் மோடி வீரர்களிடம் உற்சாகமாக பேசி ஊக்கப்படுத்தினார்.

அனைவரையும் நன்றாக விளையாட வேண்டும் என்று பாராட்டிய பிரதமர் மோடி, முகமது ஷமியை கட்டி அணைத்து, ஷமி இந்த முறை நன்றாக விளையாடினீர்கள் என பாராட்டினார். இறுதியாக டெல்லி வந்த பிறகு அனைத்து வீரர்களையும் நேரில் சந்திக்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.

இறுதிப்போட்டியில் தோற்று இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வீரர்கள் அறைக்கு வந்து வீரர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தியது வீரர்களுக்கு ஒரு நல்ல உற்சாகத்தை அளித்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.