ராகுல் டிராவிட் ஒப்பந்தம் முடிவு.. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்..?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைந்தது. டிராவிட் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்கலாம். 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்:

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த 2021-ஆம் ஆண்டு  டி20 உலகக் கோப்பையில் இந்தியா லீக் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு அவரது ஒப்பந்தம் முடிந்தது. பிறகு பிசிசிஐ அவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கவில்லை. இதற்குப் பிறகு, ராகுல் டிராவிட் 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.டிராவிட்டிடம் இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு டிராவிட்டின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்தியா அணி உலகக்கோப்பையை கைப்பற்றி இருந்தால் டிராவிட்டை மீண்டும் பயிற்சியாளராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கலாம். ஆனால் இப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். 2019 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியுடனான ஒப்பந்தம் முடிந்தபோது பிசிசிஐ மீண்டும் சாஸ்திரியை தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பார் என அறிவித்தது.

எதிர்கால குறித்து யோசிக்க நேரமில்லை:

உலகக்கோப்பை போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிறிது காலம் உலகக்கோப்பையில் முழு கவனம் செலுத்தினேன். அணியை தயார்படுத்துவதற்காக அயராது உழைத்தேன். இது தவிர வேறு எதையும் நான் நினைக்கவில்லை. எதிர்கால திட்டங்களை பற்றி யோசிக்க கூட நேரத்தை செலவிடவில்லை.

தலைமை பயிற்சியாளரின் பதவி காலத்தை நீட்டிப்பதா.? அல்லது நீக்குவதா.? என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதி போட்டியிலும், T-20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள்  உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் விளையாடியது.

ஆனால் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan