மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

அரசு பள்ளியில் பயின்று மருத்துவப்படிப்பில் 7.5 % உள் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளை தமிழக அரசே ஏற்கும்  என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவ தரவரிசை பட்டியலில், 951 பேர் இடம்பெற்றனர்.முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டன.இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள் என்று தெரிவித்தார். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது என்றும் இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்”.கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும். மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம்.திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு சுமை ஏற்படாத வண்ணம் Post Matric உதவித்தொகை மூலம் கல்விக்கட்டணத் தொகை வழங்கப்படும் என நவம்பர் 18-ஆம் தேதி அன்றே அறிவிக்கப்பட்டது. இதனை உடனே செலுத்த,தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தில் சுழல்நிதி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment