பிரசாதங்கள் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை: ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் அரசின் ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் தமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின் பால் நிறுவனம்) மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும் மற்றும் 15 மில்லி லிட்டர் அளவு கொண்ட பேக்கிங்கிலிருந்து 20 கிலோகிராம் வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை, ஆவின் நிறுவனத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும்,கருவறை மற்றும் பிரகாரங்களில் தரமற்ற நெய்யினை பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டும் சார்நிலை அலுவலர்களுக்கு கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

  • திருக்கோயில்களில் விளக்கேற்றவும் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
  • மேலும்,திருக்கோயில்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை தயார் செய்ய பயன்படுத்தப்படும் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களையும், பக்தர்களுக்கு நெய்விளக்கு ஏற்றுவதற்கு விற்பனை செய்யப்படும் நெய்யினையும் ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.