Wednesday, November 29, 2023
Homeஇந்தியாநேபாள நிலநடுக்கம்..128 பேர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்..

நேபாள நிலநடுக்கம்..128 பேர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்..

நேற்று (வெள்ளிகிழமை) இரவு 11.32 மணியளவில் நேபாள தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் வரை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகி உள்ளன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 128 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில் காவல்துறை, மீட்புபடையினர் மற்றும் நேபாள ராணுவம் ஆகியோர் இணைந்து மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு.! 

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, பீகார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், “நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம். நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.