நீட் தேர்வால் தொடரும் தற்கொலை..! பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? – அண்ணாமலை

தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன?

இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த பின் தோல்வி பயத்தால், நேற்று கனிமொழி என்ற மாணவியும், இன்று சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்கள் தைரியமாக இருக்குமாறும், விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வறுமையை கண்டு பயந்து விடாதே… திறமை இருக்கு மறந்து விடாதே… என்று புரட்சித்தலைவர் பாடியது மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.

உங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன? மருத்துவக் கல்லூரி கட்ட..…பெரிய மருத்துவமனை கட்ட… என்று இன்னும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன. தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன?

தமிழக மாணவச் செல்வங்களே மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்… அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.