மக்களவை தேர்தல்..! 195 பேர் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்.. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

BJP: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதி வெகுவிரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2 நாட்களாக பாஜக தலைவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

Read More – குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சித்தராமையா..!

நேற்று முன்தினம் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நள்ளிரவு வரை இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டனர். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இருந்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களிலும் மோடி வாரணாசியில் போட்டியிட்ட நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதே தொகுதியில் களமிறங்குகிறார்.

Read More – மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அருணாச்சல மேற்கு தொகுதியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாட்டின் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் குஜராத்தில் பாஜக 15 தொகுதிகளை அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தென் இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மற்றும் தெலங்கானாவுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

Leave a Comment