சட்டப்பிரிவு 370 நீக்கம்…இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி,இன்று ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு சென்று அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் காணொளி மூலம் உரையாற்றுகிறார்.அதன்பின்னர்,ரூ.20,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது, பிரதமர் மோடி “அம்ரித் சரோவர்” என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.இத்திட்டம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும்,ரூ.3,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்கிறார்.8.45 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை பனிஹால் மற்றும் காசிகுண்ட் இடையேயான சாலை தூரத்தை 16 கிமீ ஆக குறைக்கும்,குறிப்பாக இரு பகுதிகளுக்கு செல்லும் பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணிநேரம் குறைக்கும்.

இதனிடையே,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில்,முதல் முறையாக இன்று பிரதமர் மோடி  பயணம் மேற்கொள்வதால்,ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.