தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..!

இன்று காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும். திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மையுடன் இன்று ஆட்சியமைக்கயுள்ளது.

தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் 133 பேர் ஆதரவு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.கஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இன்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் நேற்று 34 அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk