குக்கர் குண்டுவெடிப்பு.! ஷாரிக்கின் தமிழக வருகை.! கோவை முபின் உடன் தொடர்பா.? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்தவர் முகமது ஷாரிக். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர். இவர் கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சில மாதங்கள் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

அப்போது தான் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் உடன் நட்பாகி, அவரது பெயரிலேயே சிம் கார்டு வாங்கியுள்ளார். இதன் காரணமாகவே, சுரேந்திரனை ரகசிய இடத்தில் வைத்து தமிழக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுவரை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒன்றரை மாதங்கள் தங்கி இருந்து குக்கர் குண்டை தயாரித்துள்ளார் ஷாரிக்.

மைசூரில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்திய பொருட்கள், சிம் கார்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மைசூரில் இருந்து அரசு பேருந்து மூலம் குக்கர் குண்டு கொண்டுவரப்பட்டு, பின்னர் ஆட்டோ மூலம் மங்களூரு வரும்போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி போன்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஏற்கனவே இது பயங்கரவாத தொடர்புள்ள சம்பவம் என குறிப்பிட்ட கர்நாடக காவல்துறை, மேலும், இந்த ஷாருக்கிற்கும், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் தொடர்பு இருந்ததா? மேலும், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருந்ததா என்கிற பல்வேறு கோணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment